×

மீன்பிடி தடை காலத்தில் மீனவர் குடும்பத்திற்கு தினமும் 500 வழங்க கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மீன்பிடி தடை காலத்தில் மீனவர்கள் குடும்பங்களுக்கு தினமும் தலா 500 வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த பீட்டர் ராயன் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15 முதல் 61 நாட்கள் அமலுக்கு வந்துள்ளது. இந்த தடை காலத்தில் மீனவ குடும்பங்களுக்கு அரசு தரும் நிவாரண நிதி தினமும் 83 மட்டுமே. ஏற்கனவே கடந்த மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர்.

இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே, மீன்பிடி தடை காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தினமும் 500 வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில், 2 வாரங்களில் அரசு பதில் தருமாறு உத்தரவிட்டனர்.


Tags : fishermen , A ban on fishing, fisherman, family, government, HC
× RELATED திருச்சூர் அருகே கப்பல் மீது படகு மோதி 2 மீனவர்கள் பலி